செய்திகள்

சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

Published On 2016-12-05 15:03 GMT   |   Update On 2016-12-05 15:03 GMT
சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக அஸ்தானா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவின் பதவிக்காலம் கடந்த 2-ம்தேதியுடன் முடிவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதையடுத்து கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், அஸ்தானாவுக்கு சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பை வழங்கியது தன்னிச்சையான சட்டவிரோத நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளது.

அனில் சின்கா 2-ம் தேதி ஓய்வு பெறுவதுபற்றி முழுமையாக தெரிந்தபோதிலும், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக் கமிட்டியை கூட்டாமல் அரசு முடிவு எடுத்துள்ளதாக தொண்டு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கான போட்டியில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ஆர்.கே.தத்தா பெயர் முன்னிலையில் இருந்தது. ஆனால், சின்காவின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதாவது நவம்பர் 30-ம் தேதியே தத்தா உள்துறை சிறப்பு செயலாளராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும் தொண்டு நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.

Similar News