செய்திகள்

ஜன்தன் கணக்குகளில் ரூ.1.64 கோடி கருப்புப்பணம்: வருமான வரித்துறை பறிமுதல்

Published On 2016-12-03 05:17 GMT   |   Update On 2016-12-03 05:17 GMT
ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.1.64 கோடி கருப்புப்பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி பொறுப்பேற்றதும், ஏழைகள் நலனுக்காக வங்கிகளில் ‘ஜன்தன்’ கணக்குகள் தொடங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 25 கோடி பேருக்கு ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. அந்த வங்கி கணக்குகளில் கடந்த அக்டோபர் மாதம் வரை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தி ஜன்தன் வங்கி கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தது. சுமார் ரூ.30 ஆயிரம் கோடி பணம் திரண்டது.

ஏழைகளின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி பணக்காரர்கள் தங்கள் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் ஜன்தன் வங்கி கணக்குகளில் அதிக பணம் போடப்பட்டுள்ள கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கி கணக்கில் மட்டும் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அது போல மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மிதுனாப்பூர், பீகார் மாநிலத்தில் ஆரா, கேரளாவில் கொச்சி, உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி ஆகிய பகுதிகளில் ஜன்தன் வங்கி கணக்குகளில் பலர் சந்தேகப்படும்படி பணம் டெபாசிட் செய்திருப்பது தெரிந்தது. அதிகாரிகள் ஆய்வில் அந்த டெபாசிட்களுக்கு சரியான பதில் இல்லை.

இதையடுத்து அந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.1.64 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News