செய்திகள்

ஜப்பான் பெண் கற்பழிப்பு: விசாரணையை துரிதப்படுத்த கேரள அரசுக்கு சுஷ்மா வலியுறுத்தல்

Published On 2016-12-02 23:36 GMT   |   Update On 2016-12-02 23:36 GMT
ஜப்பான் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த கேரள அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் கற்பழிப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 வெளிநாட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவளம் வந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடந்த நவம்பர் 25-ம் தேதி நடந்துள்ளது. கோவளம் கடற்கரையில் சங்கு வியாபாரம் செய்து வருபவர் தேஜாபவார் (வயது 26). இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஜப்பான் நாட்டையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்து சங்கு மற்றும் பொருட்களை வாங்கினார்.

அதன் பிறகு அந்த பெண் தான் தங்குவதற்கு அறை வசதி செய்து தர முடியுமா? என்று தேஜாபவாரிடம் கேட்டுள்ளார். அவரும் தான் தங்கி உள்ள அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். பிறகு உணவு வாங்கி வருவதாக வெளியில் சென்ற தேஜாபவார் சிறிது நேரம் கழித்து அங்கு வந்தார்.

பிறகு அந்த சுற்றுலா பயணியை கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்தார். அதன் பிறகு அந்த பெண்ணை தனது அறையில் இருந்து விரட்டி விட்டு அவர் சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் நாட்டு பெண், தான் கற்பழிக்கப்பட்டது பற்றி கோவளம் கடற்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேஜாபவாரை கைது செய்தனர். அவர் இதுபோல வேறு சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி நடந்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் பெண் பயணி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் கற்பழிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கேரள அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News