செய்திகள்

ரூ.13860 கோடி கருப்புப் பணம்: குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Published On 2016-12-02 15:59 GMT   |   Update On 2016-12-02 15:59 GMT
கணக்கில் காட்டப்படாத ரூ.13860 கோடி பணம் இருப்பதாக தகவல் தெரிவித்த குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
அகமதாபாத்:

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மேலும், புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. எனவே, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றுவோர் மற்றும் வரி செலுத்தாத நபர்களை கண்டறியும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம், தங்கம் சிக்கியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா தன்னிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.13860 கோடி இருப்பதாக தெரிவித்தார். வருமான வரித்துறையின் ஐ.டி.எஸ். எனப்படும் வருமான அறிவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இதனை வெளிப்படுத்திய ஷா, அரசு விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த தயார் என்று கூறியிருந்தார்.

வரியின் முதல் தவணையை ரூ.975 கோடியை செலுத்த நவம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால், அவர் செலுத்த தவறியதால் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News