செய்திகள்

மம்தாவைத் தொடர்ந்து களமிறங்கிய எம்.எல்.ஏ.க்கள்: சுங்கச்சாவடியில் ராணுவத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்

Published On 2016-12-02 11:29 GMT   |   Update On 2016-12-02 11:29 GMT
மேற்கு வங்காள சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெற வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் நேற்று திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவ்வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பதாகவும், போர் போன்ற பரபரப்பான சூழ்நிலை உருவானால் இப்பகுதியில் செல்லும் வாகனங்களை மடக்கி ராணுவத்தின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஒத்திகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மாநில அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் தலைமை செயலகம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்களை குவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், தலைமை செயலகத்தில் மம்தா பானர்ஜி விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். சுங்கச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ராணுவம் குவிப்பு தொடர்பாக ஏற்கனவே ராணுவம் கடிதம் எழுதியிருக்கிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல்துறை பதில் கடிதம் எழுதியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News