செய்திகள்

ஆதார் எண் மூலம் பணமில்லா பரிவர்த்தனை: மத்திய அரசின் அடுத்த திட்டம்

Published On 2016-12-02 10:21 GMT   |   Update On 2016-12-02 10:22 GMT
பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
புது டெல்லி:

ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்கு பிறகு பணமில்லா பரிவர்த்தனைகள் பக்கம் நாட்டு மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இதற்கு ஏற்றாற்போல பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு வழிகளிலும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது. இதற்காக அனைத்து மொபைல் போன்களிலும் இயங்கக்கூடிய ஆதார் செயலி (app) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த செயலி நடைமுறைக்கு வந்தால் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் போல ஆதார் எண்ணை வைத்தும் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே கூறுகையில், ‘ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை 1.31 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதன் எண்ணிக்கையை நாள்தோறும் 40 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க உதவும் வகையில் கைரேகை அல்லது கண் விழியை அடையாளம் காணக்கூடிய மொபைல் போன்களை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளோம் என நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

Similar News