செய்திகள்

புலியுடன் ’செல்பி’ எடுக்க முயன்ற மனநோயாளி மீட்பு

Published On 2016-11-27 09:34 GMT   |   Update On 2016-11-27 09:34 GMT
மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் புலிகள் நடமாடும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் குதித்து, புலியின் தலையில் கைவைத்தபடி ’செல்பி’ எடுக்க முயன்ற 24 வயது வாலிபரை வனக்காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம், பாட்னாவில் உள்ள கட்ராஜ் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான வனவிலங்கு காப்பகம் உள்ளது. வழக்கம்போல் நேற்று இந்த காப்பகத்துக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இங்குள்ள விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்த காப்பகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட புலிகளின் வசிப்பிடத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சுதோதன் வான்கெடே(24) என்பவர் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து புலிகளின் குகைகள் இருக்கும் சுமார் 35 அடி ஆழப்பகுதிக்குள் திடீரென குதித்தார்.

அங்கிருந்த முஹம்மது என்ற புலியை நோக்கி முன்னேறிசென்ற அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

அவர்களின் பிடியில் இருந்து நழுவி ஓடிய அவர், மீண்டும் ஒரு வெள்ளைப்புலி அடைத்து வைக்கப்பட்டுருக்கும் குகைக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். இதை வேடிக்கை பார்த்த மக்கள் பீதியில் கூச்சலிட்டனர்.

கூச்சலை கேட்டால் உள்ளே இருக்கும் புலி மிரண்டுப்போய்  சுதோதன் வான்கெடே-வை தாக்கி கொன்றுவிடும் என்று எச்சரித்த காவலர்கள் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அந்த வெள்ளைப்புலியின் அருகில் சென்ற சுதோதன் வான்கெடே, அதன் தலையின்மீது கைவைத்தபடி ஸ்டைலாக ‘செல்பி’ எடுக்க முயன்றதாக இந்த காட்சிகளை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.

அதற்குள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் பறந்ததால் அப்பகுதிக்கு போலீசாரும் வந்து சேர்ந்தனர். அந்த வெள்ளை புலி சற்று நேரத்துக்கு முன்னர்தான் தனது மதிய உணவை முடித்திருந்ததால், போனால் போகட்டும் மாலைவேளை ஸ்நாக்ஸ் ஆக இவனை பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என விட்டு வைத்திருந்ததோ.., என்னவோ?

அந்த புலிக்கு தேவையான இரையை குகையின் உள்ளே கொண்டுபோய் வைக்கும் வாசலை தொடர்ந்த ஒரு காவலர், மெல்லிய குரலில் அங்கிருந்து வெளியே வருமாறு சுதோதன் வான்கெடே-வை அழைத்தார். குகையின் பக்கவாட்டு கதவின் அருகே அவர் வந்தபோது, அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்த காவலர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தனக்கு உடல்நிலை சரியில்லை, கையில் பணம் இல்லை என்று திரும்பத்திரும்ப கூறிவரும் சுதோதன் வான்கெடே மனநோயாளியாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News