செய்திகள்

திருப்பதியில் பூட்டிய வீடுகளில் திருடிய சென்னை தம்பதி கைது

Published On 2016-10-28 05:11 GMT   |   Update On 2016-10-28 05:12 GMT
திருப்பதியில் பூட்டிய வீடுகளில் திருடிய சென்னை தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி பகுதியில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் ரோந்து சென்றனர். ரேணிகுண்டா- சந்திரகிரி சாலையில் ரமானுஜன்பல்லி கிராஸ் பஸ் நிலையத்தில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை சேர்ந்த கருணா பிரபு (வயது32). அவரது மனைவி சவுமியா (32). என்பது தெரியவந்தது.

அவர்கள் கடந்த 20 வருடங்களாக சென்னையில் வசித்து வந்ததாகவும், கடந்த 5 மாதங்களாக திருப்பதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

கணவன், மனைவி இருவரும் கடந்த 15 மாதமாக மங்களம், சுப்பாரெட்டி நகர், கொர்லகுண்டா, எம்.ஆர். பல்லி, ராமச்சந்திரா நகர், ஜெயசங்கர் காலனி, திருச்சானூர் சாலை, பார்வதிபுரம், பகுதிகளில் பகல் நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் தெருக்களில் சுற்றி, பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை திருடி வந்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து ½கிலோ தங்க நகை, மற்றும் 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலை மதிப்புள்ள புடவைகள், 2 எல்.இ.டி. டி.வி.கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் 18 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் இருவரும் சென்னையில் 15 வீடுகளில் திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். சுமார் 10 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் ஜாமீனில் வெளியில் வந்தஉடனே அவர்கள் திருப்பதிக்கு வந்து வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.

இவர்களை கைது செய்த போலீசார் குழுவை திருப்பதி சூப்பிரண்டு ஜெயலட்சுமி பாராட்டினார்.

Similar News