செய்திகள்

ஆதார் கார்டு இல்லாததால் ரே‌ஷனில் பொருள் வழங்க மறுப்பு: பட்டினி கிடந்து தலித் வாலிபர் பலி

Published On 2016-10-24 05:53 GMT   |   Update On 2016-10-24 05:53 GMT
ஆதார் கார்டு இல்லாததால் ரே‌ஷனில் பொருள் வழங்க மறுத்ததால் பட்டினி கிடந்து தலித் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் தாருதா கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 28). தலித் சமூகத்தை சேர்ந்தவர். கூத்து கலைஞராக இருந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனைவி உடல் ஊனமுற்றவர். குழந்தைகள் இல்லை. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருந்தது. அதில் எந்த வருமானமும் இல்லை.

தர்மேந்திராவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி ஊனமுற்றவர் என்பதால் அவராலும் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

தர்மேந்திராவுக்கு ரே‌ஷன் கார்டு இருந்தது. ஆனால் அவர் ஆதார் கார்டு உரிய காலத்தில் பெறவில்லை. எனவே ரே‌ஷனில் அவருக்கு உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.

இதனால் வீட்டில் உணவு பொருட்கள் இல்லாமல் தவித்தனர். அந்த ஊரைச்சேர்ந்த மக்கள் அவ்வப்போது உணவு வழங்கி வந்தனர். அவர்களும் உணவு வழங்குவதை காலப்போக்கில் நிறுத்திவிட்டனர்.

இதனால் கணவன்-மனைவி இருவரும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்தனர். இதில் பட்டினி கிடந்தே தர்மேந்திரா நேற்று காலை இறந்துவிட்டார். அவருடைய மனைவி பட்டினியால் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் வெளிவந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கைகளும், டி.வி. சேனல்களும் இந்த செய்தியை பெரிதுபடுத்தி வெளியிட்டன. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அந்த வீட்டில் எந்தவித உணவு பொருளும் இல்லாமல் பரிதாப நிலையில் இருந்தது. இந்த பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Similar News