செய்திகள்

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் ரூ.1.6 கோடி செலவில் அ.தி.மு.க.வினர் பூஜை

Published On 2016-10-22 06:43 GMT   |   Update On 2016-10-22 06:43 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு ரூ.1.6 கோடி செலவில் தங்கம் மற்றும் கவசங்களை வழங்கி அ.தி.மு.க.வினர் பூஜை செய்தனர்.
மைசூர்:

முதல் - அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புவதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள்.

மைசூரில் உலகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி ஆலயம் உள்ளது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா பல தடவை இந்த ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

எனவே இந்த ஆலயத்தில் அவருக்காக சிறப்பு பூஜைகள் செய்ய அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர். நேற்று அங்கு 5 அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்றனர்.

மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தின் நுழைவு வாயில் விநாயகர், ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. அந்த இரு சிலைகளுக்கும் அ.தி.மு.க.வினர் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்களை காணிக்கையாக கொடுத்தனர்.

ஆஞ்சநேயர் சிலை சுமார் 3½ அடி உயரம் கொண்டது. அந்த சிலைக்கு 4710 கிராம் எடையில் தங்க கவசமும், 15 கிலோ எடையில் வெள்ளிக்கவசமும் வழங்கப்பட்டது.

அது போல 1½ அடி உயரமுள்ள விநாயகர் சிலைக்கு 1689 கிராம் எடையில் தங்க கவசமும், 4852 கிராம் எடையில் வெள்ளி கவசமும் சாத்தப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி கவசங்களுக்கு அ.தி.மு.க.வினர் ரூ.1.6 கோடி செலவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று காலை 9.15 மணிக்கு இந்த கவசங்களை பொருத்தி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலய தலைமை குருக்கள் சசிரேகா தீட்சிதர் சிறப்பு பூஜைகள் நடத்தினார். சாமுண்டீஸ்வரிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியங்கள் மற்றும் பிரசாதங்களை அ.தி.மு.க.வினர் பெற்றுக்கொண்டனர்.

Similar News