செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் மனு

Published On 2016-10-21 16:30 GMT   |   Update On 2016-10-21 16:30 GMT
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு குடியரசு தலைவர் தலையிடக்கோரி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மனு அளித்தனர்.
புதுடெல்லி:

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் டெல்லியில் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.

அப்போது, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்க குடியரசுத் தலைவர் தலையிட வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில், காவிரி விவகாரம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம் தொடங்கி, நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை, கர்நாடக அரசின் அணுகுமுறை காரணமாக தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனே அமைக்கவும், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இச்சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா, ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News