செய்திகள்

ஜே.என்.யு. மாணவர் மாயமான விவகாரம்: துணை வேந்தர் அலுவலகத்தை சிறைபிடித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-10-19 23:58 GMT   |   Update On 2016-10-19 23:59 GMT
ஜே.என்.யு. மாணவர் மாயமான விவகாரத்தில், துணை வேந்தர் மற்றும் அதிகாரிகளின் அலுவலகத்தை சிறைபிடித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது. இவர் முதுகலை பயோ டெக்னாலஜி படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார். இவர் அகில இந்திய மாணவர் சங்க அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் மாணவர் நஜீப் அகமதை சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை. முன்னதாக சனிக்கிழமை மாலை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சில மாணவர்களுடன் நஜீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நஜீப்பின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி வசந்த் குஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். விடுதி தேர்தல் தொடர்பாக இரு குழுவை சேர்ந்த மாணவர்களிடையே தகராறு நிலவி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரம் தொடர்பாக ஜே.என்.யு மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் அதிகாரிகளின் அலுவலகத்தை பூட்டு போட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து துணை வேந்தர் ஜெகதீஸ் குமார் கூறுகையில், “நாங்கள் மதியம் 2.30 மணி முதல் உள்ளே வைத்து பூட்டப்பட்டோம். எங்களுடன் உடல்நிலை சரியில்லாத சர்க்கரை நோயாளி பெண் அலுவலர் ஒருவரும் உள்ளார்” என்று தெரிவித்தார்.

சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக இவர்கள் அறையில் வைத்து அடைக்கப்பட்டனர். தாளிட்டு கட்டடத்திற்கு முன்பாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று ஜே.என்.யு. மாணவர் தலைவர் மோகித் பாண்டே தெரிவித்தார். மேலும், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளே உள்ளது. உள்ளே உள்ளவர்களுக்கு உணவும் அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தொடர்ச்சியாக நள்ளிரவிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News