செய்திகள்

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகலால் பரபரப்பு

Published On 2016-10-01 06:26 GMT   |   Update On 2016-10-01 09:46 GMT
காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன் என்று மூத்த வக்கீல் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.
பெங்களூர்:

பிரபல மூத்த வக்கீல் பாலி எஸ். நாரிமன் (வயது 87). இவர் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

காவிரி வழக்கில் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் நாரிமன் வருத்தம் அடைந்தார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை கர்நாடகம் மதிக்காமல் இருப்பதால் நாரிமன் அதிருப்தி அடைந்துள்ளார். இனி கர்நாடக அரசு சார்பில் ஆஜர் ஆகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக இருந்தும் அதன் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடகாவுக்காக வாதாடினால் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கருதியே அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.

தனது முடிவை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா கூறும் போது “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Similar News