செய்திகள்

பங்குச்சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிப்பு: தத்தாத்ரேயா

Published On 2016-09-29 11:27 GMT   |   Update On 2016-09-29 11:27 GMT
பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீதம் நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க இ.பி.எப். அமைப்பு பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் இ.பி.எப். அமைப்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது பங்குச்சந்தையில் இ.பி.எப். நிதியை கூடுதலாக முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

Similar News