செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: நீதிபதிகள் சொல்வது சட்டம் ஆகாது- சித்தராமையா விமர்சனம்

Published On 2016-09-28 04:37 GMT   |   Update On 2016-09-28 04:37 GMT
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிய சித்தராமையா நீதிபதிகள் சொல்வது சட்டம் ஆகாது என்று விமர்சனம் செய்தார்.

பெங்களூர்:

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிய சித்தராமையா நீதிபதிகள் சொல்வது சட்டம் ஆகாது என்று விமர்சனம் செய்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. நமது தேசிய நீர்வளத்துறையானது பாசனத்தை விட குடிநீருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.

நீதிபதிகள் சொல்வது எல்லாம் சட்டம் ஆகாது. அது ஒழுங்குபடுத்துவதும் ஆகாது. கோர்ட்டு தீர்ப்பு நகலை முழுமையாகப் படிக்க வில்லை. தீர்ப்பு குறித்த விவரங்களைப் படித்து தெரிந்து கொண்ட பின்னரே கர்நாடக அரசின் முடிவு அறிவிக்கப்படும். கர்நாடக அரசின் வக்கீல் பாலி நாரிமன் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்காக கர்நாடகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா கூட்டியுள்ளார்.

தொடர்ந்து கர்நாடக மந்திரி சபை கூட்டமும் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடலாமா? அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா? என விவாதிக்கப்பட இருக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த முறை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜனதா பங்கேற்கவில்லை. இந்த முறை பா.ஜனதா கலந்து கொள்ளும் என்று மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

நேற்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து எடியூரப்பா கருத்து தெரிவிக்கையில் “துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

Similar News