செய்திகள்

குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரிகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கும்பல்

Published On 2016-09-27 12:37 GMT   |   Update On 2016-09-27 12:37 GMT
குஜராத் மாநிலத்தில் கோவிலுக்குள் புகுந்து பூசாரிகள் இருவரை கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள சாயிஜ் கிராமத்தில் சித்தாநாத் மகாதேவ் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஆசிரமமும் உள்ளது. ஆசிரமத்தில் நேற்று இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தலைமை பூசாரி திலிப்கிரி மகராஜ், உதவி பூசாரி ஐஸ்வர்வன் மகராஜ் ஆகியோரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

பூசாரிகளை கொன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். எனினும், கோவிலில் உள்ள விலைமதிப்புமிக்க தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அப்படியே இருந்தன. எனவே, இது முன்பகை காரணமாக திட்டமிட்டு செய்த கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இதுபற்றி காந்தி நகர் மாவட்ட எஸ்.பி. கூறும்போது, “பூசாரிகள் இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது கொல்லப்பட்டதால் உள்ளே இருந்து யாரோ ஒருவர் உதவி செய்திருக்க வாய்ப்பு உள்ளது. கொள்ளை முயற்சியில் நடந்த கொலை என்பதை தெளிவாக கூற முடியாது. கொலையாளிகள் தெரிந்த நபர்களாக இருக்கலாம். அத்துமீறி உள்ளே நுழைந்ததற்கான தடயங்களும் இல்லை. மதிப்புமிக்க பொருட்கள் உள்ளே இருக்கின்றன. எனவே, இதுபோன்ற கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.

Similar News