செய்திகள்

இந்திய தூதர் அவமதிப்புக்கு கண்டனம்: பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Published On 2016-09-08 02:53 GMT   |   Update On 2016-09-08 02:53 GMT
கராச்சியில் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
புதுடெல்லி:

கராச்சியில் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

பாகிஸ்தானின் கராச்சி நகர வர்த்தகர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உரையாற்றுவதற்காக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக கராச்சி சென்றார்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சியை திடீரென அதிகாரிகள் ரத்து செய்தனர். இது குறித்து முன்கூட்டியே இந்திய தூதருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் கராச்சி சென்ற அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிடவில்லை.

ஆனால் கடந்த 5-ந் தேதி கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கவுதம் பம்பாவாலே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். கண்ணாடி மாளிகையில் தங்கியிருப்போர், மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது என்று அவர் பேசியிருந்தார்.

எனவே அவரை அவமதிக்கும் நோக்கில் தான் வர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளனர் என இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதில், கராச்சியில் இந்திய தூதருக்கு அளிக்கப்பட்ட அவமரியாதைக்கு கடும் கண்டனத்தை வெளியுறவு செயலாளர் (மேற்கு) சுஜாதா மேத்தா பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தூதர்கள் பாகிஸ்தானில் எவ்வித தடையுமின்றி தங்கள் வழக்கமான பணிகளை ஆற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்ற இந்தியாவின் நம்பிக்கையையும் அதில் எடுத்துரைக்கப்பட்டு இருந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறினார்.

Similar News