செய்திகள்

மரணத்தில் தொடர்ந்து மர்மம்: கலாபவன் மணியின் மேலாளர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

Published On 2016-08-25 05:39 GMT   |   Update On 2016-08-25 06:13 GMT
கலாபவன் மணியின் மரணம் குறித்து மேலாளர், உதவியாளர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இங்குள்ள பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் கலாபவன் மணியும் சிலரும் கலந்து கொண்டனர்.

மது விருந்தின்போது கலாபவன்மணி மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 6-ந்தேதி இறந்து விட்டார். கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கலாபவன்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் பரிசோதனையில் அவரது உடலில் மெத்தனால் என்ற வி‌ஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்து இருந்தது தெரிய வந்தது. இது அவரது உடலில் எப்படி? கலந்தது என்ற மர்மத்தை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தாரா? என்பதை உறுதிப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று கலாபவன் மணியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சினையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தனிக்கவனம் செலுத்தினார். சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை சி.பி.ஐ. விசாரணை தொடங்கவில்லை.

இதற்கிடையில் கலாபவன்மணியுடன் மது விருந்தில் பங்கேற்ற சிலர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கலாபவன்மணியின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சாலக்குடி போலீசார் கலாபவன் மணியின் மேலாளர் ஜோதி, கார் டிரைவர் பீட்டர், உதவியாளரும் கலாபவன்மணியின் மனைவியின் உறவினருமான பிஜுன், உதவியாளர்கள் அனீஷ், முருகன், அருண், ஆகிய 6 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சாலக்குடி போலீசார் கோர்ட்டில் மனு செய்திருந்தனர். உண்மை கண்டறியும் சோதனை நடத்த சாலக்குடி கோர்ட்டும் அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்று போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Similar News