உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

Published On 2024-02-21 05:31 GMT   |   Update On 2024-02-21 05:32 GMT
  • கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
  • வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News