உள்ளூர் செய்திகள்

கோடை காலம் தொடங்கியதையொட்டி வேலூர் மக்கானில் போக்குவரத்து போலீசாருக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தொப்பி மற்றும் நீர்மோர் வழங்கினார்.

போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ், தொப்பி, மோர்

Published On 2023-03-01 10:09 GMT   |   Update On 2023-03-01 10:09 GMT
  • வேலூரில் வெயிலை சமாளிக்க நடவடிக்கை
  • டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்

வேலுார்:

வேலுாரின் கோடைவெயிலால் பகல் மட்டுமின்றி இரவிலும் அனலின் தாக்கம் இருக்கும். இதனால், பகல் நேரத்தில் கோடைக்காலத்தில் வெளியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து போகும். அப்படியே வெளியில் செல்பவர்களும், குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என்று பாதுகாப்பு உபகரணங்களுடனே வலம் வருவார்கள்.

சாதாரணமாக ஒருசில மணி நேரம் வெளியில் சென்று திரும்பு பவர்களுக்கே கோடையை தாங்க இத்தனை பொருட்கள் தேவைப்படுகிறது. ஆனால், காலை யில் இருந்து மாலை வரை சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் நிலைமையை சொல்லிமாளாது.

அவர்கள் பாடு திண்டாட்டம்தான். கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச் சொட்ட கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில்தான் வேலூர் மாவட்ட போலீ சாருக்கு கோடைக்காலத்தில் வெப்பம் தாங்கும் வகையிலான பெரிய அள வில் நவீன தொப்பிகள், அவ்வப்போது மோர், எலுமிச்சை பழச்சாறு போன்றவை போலீஸ்துறையால் வழங்கி வருகின்றனர்.

இந்தமுறை போக்கு வரத்து போலீசாரின் துயர் துடைக்க தொப்பியுடன், அவர்கள் கண்களை பாதுகாக்க வசதியாக கருப்பு கூலிங்கிளாஸ் வழங்கப்படுகிறது.

வேலூர் மக்கான் சிக்னல் அருகே போலீசாருக்கு தொப்பி மற்றும் ஜில்லென மோர் ஆகியவற்றை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி கூலிங்கிளாஸ் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் தொடர்ந்து 120 நாட்கள் போலீசாருக்கு தாகம் தீர்க்க மோர் அல்லது எலுமிச்சை ஜூஸ் தெர்மாகோல் தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 110 போலீசாருக்கு தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஜில்லென மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News