தமிழ்நாடு

பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர் சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர், அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்- தேர்தல் குறித்து விழிப்புணர்வு

Published On 2022-06-18 09:32 GMT   |   Update On 2022-06-18 09:54 GMT
  • பள்ளியில் தேர்தலுக்கான வாக்குபெட்டி, வாக்குசீட்டு, மேஜை உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு இருந்தது.
  • மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது.

சூலூர்:

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரிபுத்தூர் கிராமம் உள்ளது.

இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செஞ்சேரிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அதன் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் மாண்பை உணர்ந்து கொள்ளும் வகையில் மாணவர் சட்டமன்ற தேர்தல் நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி பள்ளியில் தேர்தலுக்கான வாக்குபெட்டி, வாக்குசீட்டு, மேஜை உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு இருந்தது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நேற்று மாணவர் சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலை பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் முன்னின்று நடத்தினார்.

மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தேர்தல் முடிந்து உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் 33 வாக்குகள் பெற்று 5-ம் வகுப்பு மாணவன் சபரீஷ் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்-அமைச்சராக ராஜேஷ் தேர்வானார்.

கல்வித்துறை அமைச்சராக தீக்‌ஷிதா, துணை அமைச்சராக மகலாட்சுமி, சுகாதாரத்துறை அமைச்சராக காவ்யா ஸ்ரீ, துணை அமைச்சராக தமிழ்செல்வி, உள்துறை அமைச்சராக கிரிதரன், துணை அமைச்சராக சித்தேஷ், விளையாட்டு துறை அமைச்சராக பிரவீன், துணை அமைச்சராக அஜய், நீர்வளத்துறை அமைச்சராக ஜனார்த்தனன், உணவுத்துறை அமைச்சராக சுப ரஞ்சனா, துணை அமைச்சராக திவ்யாஸ்ரீ, வனத்துறை அமைச்சராக ஸ்ருதிகா, துணை அமைச்சராக அகிலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்று மாணவர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முடிவுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே எடுத்து கொள்ளலாம். இதற்காக எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.

மாணவர் சட்டமன்ற தேர்தல் நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இன்றும் பலருக்கு தேர்தல் குறித்தும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் முழுமையாக தெரிவதில்லை.

இதன் காரணமாக பள்ளி படிக்கும் போதே மாணவர்களுக்கு தேர்தல் என்றால் என்ன? எப்படி நடக்கும் என்பது குறித்து இந்த மாணவர் சட்டமன்ற தேர்தலில் கூறப்படுகிறது.

மேலும் தாங்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் மாணவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இருக்கும்.

இதனால் வருங்காலத்தில் இவர்கள் யாரிடமும் கேட்காமல் தாங்களாகவே தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒட்டு போட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கணினி மற்றும் ஆரோக்கியம் குறித்த ஹைடெக் லேப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News