உள்ளூர் செய்திகள்

பிரபல நகைக்கடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி- அலாரம் ஒலித்ததால் பல லட்சம் தங்க, வைர நகைகள் தப்பியது

Published On 2022-12-27 09:51 GMT   |   Update On 2022-12-27 09:51 GMT
  • கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
  • நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குன்னத்தூர் சாலை பிரிவில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பின்னர் வியாபாரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த நகைக்கடையையொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகை கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் மரச்செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் மர்மநபர்கள் அரசு ஆண்கள் பள்ளிக்குள் சென்று நகை கடையின் பின்பகுதிக்கு வந்துள்ளனர். சுமார் 3 அடி அகலத்துக்கு சுவற்றைத் துளையிட்டுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் சென்று உள்ளனர்.

கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கடையின் இரவு நேர காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது கடையின் பின்பகுதி சுவற்றில் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து கடையின் உரிமையாளருக்கும் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் பரமசிவம் கடைக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் தப்பியது.

சம்பவ இடத்திற்கு பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News