உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் கடன்- போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2022-06-09 04:06 GMT   |   Update On 2022-06-09 04:06 GMT
  • சமீபத்தில் சென்னையில் இளம்பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
  • தொடர்ந்து உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

பணகுடி:

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழப்பதோடு, லட்சக்கணக்கில் கடனாளியாகி கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் சென்னையில் இளம்பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் போலீஸ் ஏட்டு ஒருவர் லட்சக்கணக்கில் கடனாளியாகி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாடன் பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் ரவி செல்வன் (வயது 40). இவர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு என்று கூறப்படுகிறது. இதனால் ரவி செல்வன் சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் ஈடுபாடு காட்டியதாக தெரிகிறது.

ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இவர் வாழ்வில் வெறுப்படைந்து நேற்று மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிக் கிடந்த ரவி செல்வன் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News