உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை மூடப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்- முற்றுகை

Published On 2022-08-18 11:23 GMT   |   Update On 2022-08-18 11:23 GMT
  • சரவணப்பொய்கையை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமாக மலையடிவாரத்தில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது விழும் மழை நீர் இந்த குளத்தில் வந்து சேர்கிறது. புனித தீர்த்தமாக கருதப்படும் சரவணப்பொய்கையில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நீராடுவது வழக்கம். உள்ளூர் மக்களும் துணி துவைக்கவும், குளிக்கவும் இதனை பயன்படுத்தி வந்தனர்.

திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் தங்களது துணிகளை துவைக்கவும், குளிக்கவும் குளத்தில் ஷாம்பூ, சோப்பு போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் கடின தன்மை அடைந்து ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதன் காரணமாக சரவணப் பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது.

மேலும் கோவில் குளம் என்றும் கருதாமல் குளக்கரையில் மலம் கழிப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை அறியாத வெளியூர் பக்தர்கள் புனித நீர்த்தம் என எண்ணி அதில் குளிக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை அடுத்து கோவில் நிர்வாகம் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தண்ணீர் தூய்மை செய்யும் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டது. தொடர் மழை காரணமாகவும் தற்போது தண்ணீர் சுத்தமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் துணி துவைப்பதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டது.

சரவணப் பொய்கையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் துணிகளை துவைக்க வசதியாக விருதுநகர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.44 லட்சத்தில் குளம் அருகில் கட்டப்பட்டுள்ள குளியல் மற்றும் சலவை கூடத்தை இலவசமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்த குளத்தின் தடுப்புகளை உடைத்து மீண்டும் துணி துவைக்கவும், குளிக்கவும் செய்தனர். இதனால் சரவணப் பொய்கை மீண்டும் பழைய நிலைக்கே மாறும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து குளத்தில் அத்துமீறி குளிப்பவர்கள் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்தது. மேலும் சரவணப் பொய்கை பகுதியில் 8 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை கண்டித்தும், சரவணப்பொய்கையை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதனிடையே பொது மக்கள் மறியல் குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து சரவண பொய்கை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் சுரேஷ், தாசில்தார் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கழிவுகளால் சரவண பொய்கை மாசு அடைவது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக 2 மாதம் மட்டும் சரவண பொய்கையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மரக்கடை முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News