உள்ளூர் செய்திகள்

மொடக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் மோதல்: பேரூராட்சி பெண் தலைவர்- தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு

Update: 2022-11-26 10:45 GMT
  • மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வாம்பாள் சரவணன் என்பவர் உள்ளார்.
  • மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாளும் போஸ்டரை அகற்றும் படி போலீசில் புகார் மனு அளித்தார்.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வாம்பாள் சரவணன் என்பவர் உள்ளார். இந்த நிலையில் மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பா.ஜனதா சார்பில் கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை அகற்றும் படி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரம் என்பவர் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதேபோல் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாளும் போஸ்டரை அகற்றும் படி போலீசில் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் தூய்மை பணியாளர்கள் மூலம் போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் பழைய யூனியன் அலுவலகம் அருகே போஸ்டர்களை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜனதா பெண் கவுன்சிலர் சத்தியா தேவியின் கணவரும் பா.ஜனதா நிர்வாகியுமான சிவசங்கர் போஸ்டர்களை ஏன் அகற்றுகிறீர்கள்? என்று கேட்டு உள்ளார். அப்போது அவருக்கும் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் மற்றும் அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் பேரூராட்சி பெண் தலைவர் செல்வாம்பாள் அவரது கணவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான சரவணன் மற்றும் பா.ஜனதா நிர்வாகி சிவசங்கர் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி போலீசில் புகார் செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் தி.மு.க., பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகி சிவசங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி பெண் தலைவர் செல்வாம்பாள், பேரூர் தி.மு.க. செயலாளரும், அவரது கணவருமான சரவணன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மகன்யா, தனலட்சுமி, பிரதீபா, கார்த்திக்கேயன், கண்ணுசாமி மற்றும் அன்னமார் நகர் தமிழரசு, பகவதி நகர் ஆனந்த ராஜ் ஆகிய 9 தி.மு.க.வினர் மீது 323 கையால் அடித்தல், 294 (பி) தகாத வார்த்தையால் பேசுதல், 506 (II) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதேபோல் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பா.ஜனதா நிர்வாகி சிவசங்கர் மீது 323 கையால் அடித்தல், 294 (பி) தகாத வார்த்தையால் பேசுதல், 506 (II) கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், எஸ்.சி, எஸ்.டி. சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Similar News