உள்ளூர் செய்திகள்

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-16 08:24 GMT   |   Update On 2022-09-16 08:24 GMT
  • மாணவர்களுக்கு தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.
  • ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட இருக்கும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனையுடன் உருவாக்கிட "பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்" எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளி கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.

இந்த ஆண்டு, முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், 3120-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

மேலும், மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் குழுக்களின் சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதன்மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுவதோடு, அவர்களை வருங்கால தொழில்முனைவோர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News