உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் நகராட்சி கடைகள் ஏலத்தில் குளறுபடி- ஏலம் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி

Published On 2022-07-10 08:40 GMT   |   Update On 2022-07-10 08:40 GMT
  • திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி இடத்திற்கு சுமார் 26 பேர் தலா ரூ.10 லட்சம் முன் பணம் கட்டி ஏலத்தில் பங்கேற்றனர்.
  • மாத வாடகை ரூ.9500-க்கு முடித்த கடையை மற்றொருவர் அந்த கடையை தான் ரூ.10,500 வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளிடம் அன்று மாலை மனு அளித்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள 16 கடைகள் மற்றும் ஆடிதபசு திருநாளை முன்னிட்டு நகர் குத்தகை ஆகிய தொடர்பான டெண்டர்கள் விடப்பட்டன. கடைகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆடித்தபசு திருவிழா குத்தகைக்காக ரூபாய் 1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடைகளுக்கு ரூ.10 லட்சம் அறிவித்த நிலையில் மிக குறைந்த நபர்களே டெபாசிட் கட்டி ஏலத்தில் பங்கேற்பார்கள் என்ற நிலையில் கடை எடுக்க விருப்பம் இல்லாமல் டெபாசிட் கட்டினால் கடை எடுப்பவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டெபாசிட் செய்தனர்.

அதில் திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி இடத்திற்கு சுமார் 26 பேர் தலா ரூ.10 லட்சம் முன் பணம் கட்டி ஏலத்தில் பங்கேற்றனர். இதில் ஒரு சிலர் இரண்டு, மூன்று டி.டி.க்கள் வேறு வேறு பெயர்களில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதில் அந்த கடையை ஒருவர் முடிவாக எடுப்பதாக கூறியதன் பேரில் கடை வாடகை ரூ.9,500 நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கடை எடுத்த நபர் டெபாசிட் கட்டிய அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் டெபாசிட் செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வருமானம் அவர்கள் நினைத்தது போல் வந்து விட்டதால் அவர்கள் யாரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மாத வாடகை ரூ.9500-க்கு முடித்த கடையை மற்றொருவர் அந்த கடையை தான் ரூ.10,500 வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளிடம் அன்று மாலை மனு அளித்தார். இதனால் மறு ஏலம் 15 நாட்கள் கழித்து நடக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

அனைத்து அரசு துறைகளிலும் டெண்டர் விடும் நிலையில் பகடிக்காக, கமிஷனுக்காக டெபாசிட் கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், ஒரு சிலர் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து இதனை சங்கரன்கோவிலில் தொழிலாக செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கடை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.10 லட்சம் டி.டி. எடுத்து கொடுத்தவர்கள் திகைத்து போய் உள்ளனர்.

Tags:    

Similar News