உள்ளூர் செய்திகள்

கோடிக்கணக்கில் வருவாய் பாதிப்பு : பாளை மண்டலத்தில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுமா? மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய சர்வே

Published On 2022-08-19 09:41 GMT   |   Update On 2022-08-19 09:41 GMT
  • நெல்லை மாநகராட்சியில் உள்ள நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன.
  • அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இரவோடு இரவாக வேலையாட்களை நியமித்து இணைப்பு கொடுத்து வருவதாகவும், வேறு யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால் அதற்காக ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் உள்ள நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

குடிநீர் இணைப்புகள்

பாளை மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் அங்கு குடிநீர் இணைப்புகள் முறைகேடாக அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இங்கு கே.டி.சி. நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சமீபத்திய காலங்களில் நூற்றுக்கணக்கான குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.30 ஆயிரம் லஞ்சம்

இதில் அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இரவோடு இரவாக வேலையாட்களை நியமித்து இணைப்பு கொடுத்து வருவதாகவும், வேறு யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால் அதற்காக ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரியாமலேயே கூடுதலாக குடிநீர் இணைப்புகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வைத்து கொடுத்துள்ளதாகவும், அவ்வாறான புதிய இணைப்புகளுக்கு மாநகராட்சியில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த பகுதியில் உள்ள சிலர் கூறுகின்றனர்.

வருவாய் இழப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீருக்கான இணைப்பு பெறுவதற்கு ரூ.6,500 முன்வைப்பு தொகை கட்ட வேண்டும். அவர்கள் வசிக்கும் தெருவில் தார்ச்சாலை இருந்தால் அதை உடைத்து குழாய் அமைக்க ரூ.1,650 ஒரு நபருக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கிறது.

ஆனால் பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பெரும்பாலான குடியிருப்புகளுக்கு இதுபோன்ற எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக கீழநத்தம் பஞ்சாயத்து வரையிலும் அரசியல் கட்சியினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குடிநீர் இணைப்பை வழங்கி உள்ளனர்.

இதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் புகார் கூறி உள்ளோம். அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றனர்.

ரகசிய சர்வே

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வார்டிலும் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு இணைப்புகள் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.

விரிவாக்கம் செய்யப்பட்ட கே.டி.சி. நகர் பகுதியில் சட்ட விரோத இணைப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையான சர்வேக்கு பின்னர் அனைத்து சட்டவிரோத இணைப்புகளும் மொத்தமாக துண்டிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News