உள்ளூர் செய்திகள்

சாலை வசதி செய்துதரக்கோரி கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை மனு

Published On 2022-10-27 09:06 GMT   |   Update On 2022-10-27 09:06 GMT
  • வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்
  • கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வடக்குமாதவி 8 வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது.

இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News