உள்ளூர் செய்திகள்

பாப்பாரப்பட்டி பாரதமாதா கோவில் நினைவாலய பூட்டை உடைத்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது

Published On 2022-08-14 09:56 GMT   |   Update On 2022-08-14 09:56 GMT
  • கோவில் சிலைக்கு மாலை அணிவிக்க கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா? என வாக்குவாதம் செய்தனர்.
  • பின்னர் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பூட்டை கல்லால் உடைத்து கதவை திறந்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.

அப்போது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும்படி வலியுறுத்தினர்.

இதற்கு கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா? என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பூட்டை கல்லால் உடைத்து கதவை திறந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பாரதமாதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் பாரதமாதா நினைவாலய கேட்டின் பூட்டை உடைத்த முன்னாள் எம்.பி. ராமலிங்கம், மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், நிர்வாகிகள் ஆறுமுகம், மணி, மவுனகுரு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News