உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா

Published On 2023-07-15 07:03 GMT   |   Update On 2023-07-15 07:03 GMT
ஆடி அமாவாசை விழா வருகிற 17 மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 17 மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள். இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் ஜோதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகிறார்கள்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News