உள்ளூர் செய்திகள்

வன பாதுகாவலரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தபோது எடுத்த படம்.

வனப்பாதுகாவலரை தாக்கிய வேட்டை கும்பல்- எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

Update: 2022-06-28 09:26 GMT
  • கொண்ட 5 பேர் கும்பல் சரவணனிடம் இருந்து பறிமுதல் செய்த துப்பாக்கியை கேட்டு தகராறு செய்து கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • குற்றவாளிகள் பற்றி தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை வன உட்கோட்டத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் சில நபர்கள் மயில், மான், காட்டுக்கோழி, காட்டுப்பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி வருவதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில் பெரும்பாலை வன கோட்டத்துக்கு உட்பட்ட ஏரியூரை அடுத்த ஏற்கோல்பட்டி வனப்பாதுகாவலர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட முருகன் மகன் சதீஷ்(20) என்பவரை பிடித்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்துள்ளார்.

விசாரணையின்போது சதீஸ் மற்றும் அவரது நண்பர்கள் கொண்ட 5 பேர் கும்பல் சரவணனிடம் இருந்து பறிமுதல் செய்த துப்பாக்கியை கேட்டு தகராறு செய்து கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சரவணனை மீட்டு வன துறையினர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து ஏரியூர் போலீசில் வனத்துறை சார்பில் புகார் தரப்பட்டது. குற்றவாளிகள் பற்றி தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த வத்தல்மலையை சேர்ந்த சரவணனின் உறவினர்கள் அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். எஸ்.பி. அலுவலகத்திற்கு சரவணனின் உறவினர்கள் சுமார் 50 பேருக்கு மேல் திரண்டு வந்து புகார் மனு கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News