உள்ளூர் செய்திகள்

கழுத்து, கை அறுக்கப்பட்ட நிலையில் பிணம்: கெங்கவல்லி விவசாயி சாவில் மர்மம் நீடிப்பு

Published On 2022-08-17 09:13 GMT   |   Update On 2022-08-17 09:13 GMT
  • 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது.
  • சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி 4 ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. காந்தி. இவரது மகன் சதீஷ் (வயது 42), விவசாயி . இவரது மனைவி வனிதா (28), தனியார் பள்ளி ஆசிரியர், இவர்களுக்கு சர்வேஷ் (8) என்ற மகன் உள்ளார்.

ரூ.20 லட்சம் கடன்

இந்த நிலையில் சதீசுக்கு 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கழுத்து மற்றும் கை அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் இறந்து கிடந்தார். இதனை பாத்த மனைவி வனிதா கதறி துடித்தார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த மோப்ப நாய் கடம்பூர் பிரிவு ரோடு வரை சென்று திரும்பியது. தடயவியல் நிபுணர்கள் கைேரகை பதிவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் கெங்கவல்லி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வீரகனூர் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சதீஷ் சாவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு-

பரபரப்பு தகவல்கள்

கடன் தொல்லையில் தவித்த சதீஷ் கெங்கவல்லியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விஷம் கேட்டதும், அந்த கடையில் விஷம் இல்லை என்று கடையில் இருந்தவர் கூறிய நிலையில் அருகில் உள்ள கடைக்கு சென்று புதிதாக கத்தி வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் நாற்காலியில் அமர்ந்த படியே கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்ததற்கான ஆதாரங்களும் இருப்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News