உள்ளூர் செய்திகள்

அதியமான்கோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 மதுக்கடைகள் அகற்றப்படுமா?

Published On 2022-07-04 10:04 GMT   |   Update On 2022-07-04 10:04 GMT
  • தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
  • போதையில் வரும் ஆசாமிகள் இருசக்கர வாகனங்களில் தடுமாறியபடியே செல்கின்றனர்.

தருமபுரி,

தருமபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இந்த 2 கடைகளுக்கும் வள்ளல் அதியமான் கோட்டம் எதிர்புறம் உள்ள பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் குடிமகன்கள் வடக்குத்தெரு கொட்டாவூர் வழியாக இந்த மதுக்கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இதற்கு அந்த தெருக்களில் வசித்துவரும் பொதுமக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போதையில் வரும் ஆசாமிகள் இருசக்கர வாகனங்களில் தடுமாறியபடியே செல்வதாலும், நடந்து வருவோர் தள்ளாடியபடி காது கூசும் அளவுக்கு ஆபாச வார்த்தைகளை பேசியபடி ஒருவருக்கொருவர் தகராறு செய்துகொள்வதாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியே வருவதே சிரமமாக உள்ளது.

எனவே இந்த 2 மதுக்கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் போதை ஆசாமிகள் தொல்லைகள் அத்துமீறி செல்வதால் நேற்று இரவு அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இந்த மதுக்கடைகள் அகற்றப்படும் வரை முழுமையான தீர்வு கிடைக்காது என்பதே அப்பகுதி மக்களின் முடிவாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News