உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி டீக்கடை உரிமையாளர் பலி

Published On 2022-05-26 08:51 GMT   |   Update On 2022-05-26 08:57 GMT
டீக்கடையை திறப்பதற்காக வந்த உரிமையாளர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு நுழையும்போது சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருகிறது.

கூடலூர் அடுத்த ஒவேலி அருகே உள்ளது ஆரோட்டுபாறை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது43).

இவர் அந்த பகுதியில் உள்ள கோவிந்தன் கடை அருகே உள்ள பால் உற்பத்தி சங்கத்திற்கு எதிரே சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தினமும் காலை வீட்டில் இருந்து நடந்து சென்று கடையை திறந்து வியாபாரம் செய்வது வழக்கம்.

இன்று காலை ஆனந்த் வழக்கம் போல் கடையை திறப்பதற்காக தனது வீட்டில் இருந்து டீக்கடை உள்ள கோவிந்தன் கடை பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

கடையின் அருகே வந்தபோது, புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென சாலைக்கு ஓடி வந்தது.

யானை வருவதை சற்றும் எதிர்பாராத ஆனந்த் அதிர்ச்சியானார். சுதாரித்து கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார்.

ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை தாக்கி ஆனந்த் உயிரிழந்ததை கேள்விப்பட்டு, அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள், ஊருக்குள் யானை வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் யானையின் நடமாட்டம் இருக்கிறதா? என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

டீக்கடையை திறப்பதற்காக வந்த உரிமையாளர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News