உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தம் அருகே யானை மிதித்து விவசாயி பலி - கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-05-25 11:13 GMT   |   Update On 2022-05-25 11:13 GMT
குடியாத்தம் அருகே யானை மிதித்து விவசாயி பலியானதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குடியாத்தம் பகுதியை தாண்டினால் ஆந்திர மாநில எல்லை உள்ளது ஆந்திர மாநிலத்தில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது.இங்கு 40க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. 

இந்த சரணாலயத்தில் உள்ள யானைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், குடியாத்தம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய படி உள்ள விளை நிலங்களுக்குள் அடிக்கடி வந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

அதிகாலை வேளைகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளை தாக்குவதும் மிதித்து கொள்வதும் என ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.

குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த முசலமடுகு கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (வயது 46) என்பவர் இன்று அதிகாலை தன்னுடைய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியை ஒட்டி நிலம் உள்ளதால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து இருந்த ஒற்றை யானை ஒன்று திடீரென சுப்பிரமணியை விரட்டி சென்று தாக்கியது.

கீழே விழுந்த விவசாயி சுப்பிரமணியை யானை காலால் மிதித்து நசுக்கியது. இதில் அலறிய சுப்பிரமணியன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து நிலத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வருவதற்குள் யானை காட்டுக்குள் ஓடிவிட்டது. சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனையடுத்து விவசாயி சுப்பிரமணி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சுப்பிரமணியத்தின் பிணத்தை குடியாத்தம்-பலமநேர் சாலையில் முசலமடுகு கிராமம் அருகே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இறந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், யானைகள் விளை நிலங்களுக்குள் புகாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் யானை தாக்கி இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் நஷ்டஈடு வாங்கித் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News