உள்ளூர் செய்திகள்
கரடி கடித்து குதறியதில் தொழிலாளி படுகாயம்

களக்காடு அருகே இன்று காலை கரடி கடித்து குதறியதில் தொழிலாளி படுகாயம்- விவசாயிகள் பீதி

Published On 2022-05-10 05:30 GMT   |   Update On 2022-05-10 05:30 GMT
கரடி தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய தொழிலாளி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (44). தொழிலாளி

இவர் இன்று அதிகாலை ஊருக்கு அருகே, அதலி சாஸ்தா கோவில் சாலையில் உள்ள வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள வாழை தோட்டத்திற்குள் கரடி பதுங்கியிருந்து வாழைத்தார்களை தின்று கொண்டிருந்தது. திடீர் என கரடி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது பாய்ந்தது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த சக்திவேலை கரடி கடித்து குதறியது.

இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்து தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.

கூட்டத்தை பார்த்ததும் கரடி தப்பி ஓடி விட்டது. உடனடியாக அவர்கள் படுகாயத்துடன், ரத்தம் சொட்ட, சொட்ட தவித்து கொண்டிருந்த சக்திவேலை மீட்டு, களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 19 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

கரடியின் 6 பற்கள் அவரது கையில் பதிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆட்கள் ஓடி வந்ததால் சக்திவேல் கரடியிடம் சிக்கி காயத்துடன் உயிர் தப்பினார்.

கரடி தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய சக்திவேல் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, கடமான்கள் அட்டகாசம் செய்து வருகின்றன. யானை 5க்கும் மேற்பட்ட பனை மரங்களையும், 1 தென்னை மரத்தையும் பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. இதுபற்றி விவசாயி சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கர் கூறியதாவது:

வனவிலங்குகள் அட்டகாசம் குறித்து வனத்துறையிடமும், கலெக்டரிடமும் பலமுறை மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்விளைவாக தொழிலாளி கரடியால் தாக்கப்பட்டுள்ளார்.

வனவிலங்குகளை விரட்டாமல் அலட்சியம் காட்டும் வனத்துறையினர் தற்போது விவசாயிகளின் உயிரோடு விளையாடி வருகின்றனர். வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தில் தொடர் அலட்சியத்தால் விவசாயிகள் உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News