உள்ளூர் செய்திகள்
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.

பாவூர்சத்திரத்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

Published On 2022-05-07 09:48 GMT   |   Update On 2022-05-07 09:48 GMT
பாவூர்சத்திரத்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வீ.கே.புதூர்:

 தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை பயன்படுத்தி நெல்லை மற்றும் தென்காசிக்கு கல்வி மற்றும் பணி சம்பந்தமாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்து விடுவதால் பஸ்களில் ஏற போட்டி போடுகின்றனர்.

இருப்பினும் பேருந்து முழுவதும் ஆட்கள் ஏறினாலும், ஒரு சிலர் அடுத்ததாக பேருந்து வர கால தாமதம் ஆகும் என கருதி காத்திருக்காமல் கூட்டம் நிறைந்த பஸ்களிலேயே ஏறி படிக்கட்டில் தொங்கிய வண்ணம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலை பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது. பாவூர்சத்திரம் பகுதியில்  நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் லாரிகள், கார்கள் என பல வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்துஅடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

எனவே ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து துறை சார்பில் பாவூர்சத்திரம்  பேருந்து நிலையத்திலிருந்து காலை மற்றும் மாலை வேளையில் குறிப்பிட்ட  2 மணி நேரத்திற்கு மட்டும்  நெல்லை மற்றும் தென்காசிக்கு கூடுதல் நேரடி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பாவூர்சத்திரம்  பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News