உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

உத்தமர் கோவில் தேர்திருவிழா நாளை தொடக்கம்

Update: 2022-05-05 10:19 GMT
உத்தமர் கோவில் சித்திரை தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்சி:

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான மும்மூர்த்திகள் திருத்தலம் அமைந்துள்ளது.

இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நாளை 6-ந் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது. பதினொரு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான நாளை கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து அனுதினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

7ம் நாள் திருவிழாவின் போது புருஷோத்தமர் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு கேடயத்தில் உபய நாச்சியார்களுடன் பெருமாள் நெல்லளவு கண்டருளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எட்டாம் நாள் குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு கண்டு வையாளி கண்டருளுகிறார்.

இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வருகிற 14-ம் தேதி சனிக்கிழமை 8:15 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News