உள்ளூர் செய்திகள்
கால்நடை கண்காட்சியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பார்வையிட்ட போது எடுத்தபடம்.

நெல்லை மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்-கலெக்டர் விஷ்ணு பேட்டி

Published On 2022-04-29 09:45 GMT   |   Update On 2022-04-29 09:45 GMT
நெல்லை மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியல் இன மக்களுக்கான உப திட்டத்தில் கால்நடைகளுக்கான கண்காட்சி நடைபெற்றது. 

தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்பு திட்டத்தின்கீழ்மண்டல அளவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கால்நடைகள், கோழிகள், ஆடுகள் , நாய்கள், வான்கோழி, வாத்து போன்றவை கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 

இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிசாமி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நாட்டினத்தைச் சேர்ந்த ஆடுகள், கோழிகள், வாத்து உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை கால்நடை பண்ணையாளர்கள், கால்நடை மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். 

மேலும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் கண்காட்சியில் பங்கேற்றனர். இந்த கண்காட்சியின் மூலம் கால்நடை மற்றும் கோழிகளின் நோய் மேலாண்மை மூலமாக உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், பல்கலைக்கழக தேசிய நச்சுயிரி ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை, ஒருங்கிணைப்பாளர் ரவி முருகன், ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
2-வது நாளாக நாளை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் சபாநாயகர் அப்பாவு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடமாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 
350-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. 
மாநகர பகுதிகளில் 150 இடங்கள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதரநிலையங்கள் என 200 இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.

நெல்ைல மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேர் போட்டுள்ளனர். 65 சதவீதம் பேருக்கு 2- தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் நாளை நடைபெறும் மெகா முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

15- வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 2.50 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். 

அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்பப்படுகிறது. போன் மூலமும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News