உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி பறிமுதல்

ஆனைமலை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-04-17 09:00 GMT
பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரள மாநிலத்தில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது
ஆனைமலை: 

ஆனைமலை  சங்கம்பாளையம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்போவதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் மறைந்திருந்து அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த   வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

 இதில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அரசு ரேஷன்  கடைகளில் வழங்கும் ரேஷன் அரிசி 50 கிலோ மூட்டை கொண்ட 34 மூட்டைகள் என 1700 கிலோ ரேஷன் அரிசியை இந்த வேன் மூலம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.  

இதையடுத்து வாகனத்தை இயக்கி வந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வன்னாமடை பகுதியை சேர்ந்த கிரி பிரகாஷ் (வயது 27) என்பவர் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் தனது நண்பர் அலாவுதீன் என்பவருடன் இணைந்து பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இலவச அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரள மாநிலத்தில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

கடத்தலில் ஈடுபட்ட கிரி பிரகாஷ் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் ஆனைமலை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய அலாவுதீன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  
Tags:    

Similar News