தமிழ்நாடு

கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சாய்ந்தது

Published On 2024-05-16 10:21 GMT   |   Update On 2024-05-16 10:21 GMT
  • அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று இருந்தது.
  • நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது பழமைவாய்ந்த அரச மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.

வடவள்ளி:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சரிந்து விழுந்தது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்றும் இருந்தது. அந்த பகுதி பொதுமக்கள் அரசமரடி விநாயகரை வணங்கி செல்வது வழக்கம். மேலும் அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுவதும் உண்டு.

நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது பழமைவாய்ந்த அரச மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் மரத்தடியில் எவரும் இல்லை என்பதால் அங்கு நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் அங்குள்ள மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதியில் மின்வினியோகத்தை துண்டித்ததுடன் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கெம்பனூரில் வேரோடு சாய்ந்த அரச மரத்தை மின்வாளால் வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதால் கெம்பனூர்-தாளியூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கெம்பனூர் கிராமத்தின் அடையாளமாக விளங்கிய 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News