தமிழ்நாடு செய்திகள்

கல்வி கற்கும் வயதில் மதுப்பழக்கம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்- அன்புமணி வேதனை

Published On 2025-12-14 14:56 IST   |   Update On 2025-12-14 14:56:00 IST
  • துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
  • மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.

மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.

இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News