தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சென்னையில் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு

Published On 2026-01-29 13:02 IST   |   Update On 2026-01-29 13:02:00 IST
  • வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
  • பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடம் மாறி சென்றவர்கள், விடுபட்டவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் அதில் வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கான வாய்ப்பு இதுவாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக குறைந்தது. அதாவது 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 1.50 லட்சம் பேர் எனவும் 2.50 லட்சம் பேர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து பெயர்களை சேர்க்க கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைய வாய்ப்புள்ளது. அதாவது 10 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

நாளையுடன் நிறைவடையும் இந்த பணியை தொடர்ந்து பெறப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Tags:    

Similar News