டி.டி.வி. தினகரன் நினைத்தால்... மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விரும்புவதாக ஓ.பி.எஸ். பேட்டி
- பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
பெரியகுளம்:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.
ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.