ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
- பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இட நெருக்கடியால் வெளியூர் செல்லும் பஸ்கள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது.
இதன் பின்னர், பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
அதன்படி, பிராட்வே பஸ் நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பஸ் நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பஸ் நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பிளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளி யேற்று அமைப்பு வழியாக பஸ் நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பஸ் நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பஸ்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2-வது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் 2 அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பஸ் நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்து மிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், .பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.