தமிழ்நாடு செய்திகள்

கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2026-01-29 12:12 IST   |   Update On 2026-01-29 12:12:00 IST
  • ஜவுளித் தொழிலுக்கென 100-க்கும் மேற்பட்ட தனித்துவ கண்காட்சி, அழகு நயப்பு வாங்குவோர், விற்போர் சந்திப்பு கருத்தரங்கும் நடக்கிறது.
  • விருதுநகர் பகுதியில் அமைய உள்ள பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான ரோடு ஷோ நடக்க உள்ளது.

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையின் வலுவான கட்டமைப்பினை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும், ஜவுளித்துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் முதலாவது சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு 360 இன்று கோவையில் தொடங்கியது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

கோவையில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜவுளித் தொழில்முனைவோர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகளையும், நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இன்று தொடங்கிய மாநாடானது நாளை வரை 2 நாட்கள் நடக்கிறது. 2 நாள் நடைபெறும் மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென 100-க்கும் மேற்பட்ட தனித்துவ கண்காட்சி, அழகு நயப்பு வாங்குவோர், விற்போர் சந்திப்பு கருத்தரங்கும் நடக்கிறது. மேலும் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான ரோடு ஷோவும் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News