என் மலர்
நீங்கள் தேடியது "ஜவுளித்துறை"
- ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
- அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கொடிசியாவில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தொழில் வளத்திற்கும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் புகழ்பெற்ற கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு முதல் முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தமிழகத்தில் சமூக நீதியும் காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியும் காட்டப்படுகிறது. இது தமிழகத்தின் தனி சிறப்பாகும். இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோ மொபைல், ஐ.டி, காலணி உற்பத்தி, மின்னணு பொருட்கள் என அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.
அதிலும் ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழகத்தின் பங்கு மட்டும் 33 விழுக்காடு.
நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில் 61.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தி.முக. ஆட்சி அமைந்ததும் துணிகள் துறை என தனி துறை உருவாக்கினோம். தொழில்நுட்ப ஜவுளிதுறையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னை, கோவையில் 2 கருத்தரங்குகளை நடத்தினோம்.
இப்படி பல முயற்சிகள் எடுத்து இந்த துறையின் வளர்ச்சிக்கு உழைக்கக்கூடிய அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த துறை வளர்ச்சிக்காக அரசு செய்துள்ள திட்டங்கள், சலுகைகள், சாதனைகள் பற்றி அவர் உங்களிடம் பேசுவார். இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பு உலக வாடிக்கையாளர்களை சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு புதிய சந்தைகள் கண்டறிவது, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம்
இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக ஜவுளித்துறைக்கு மட்டும் 9 ஆயிரத்து 264 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டிலும் ரூ.915 கோடி மதிப்பில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-2026-ம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லை என்று சொன்னாலும் உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி நிறுவனங்களுக்கு அதி நவீன நெசவு மற்றும் பின்னலாடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து நீங்களும் வளர்ந்து, தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் திராவிட மாடல் அரசின் பெருங்கனவில் ஜவுளித்தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி இதற்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் நடந்த மாநாட்டை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதி அளிக்கிறேன். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து விழாவில் தொழில் தொடங்க ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அரசு கைத்தறித்துறைத் செயலாளர் அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கைத்தறி இயக்குனர் மகேஸ்வரி, நிர்வாக இயக்குனர் கவிதா, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.
திருப்பூர்:
கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.
இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.
தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.
இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-
ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.
உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- பயிற்சியானது 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் இந்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் சேலம் நெசவாளர் சேவை மையம், இணைந்து கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி வரை 45 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பயிற்சிக்கு 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தினசரி ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.
நேற்று பயிற்சிக்கு வந்தவர்களுக்கு பயிற்சிக்கான கையேடுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் செய்திருந்தார்.
- சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
- தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.
திருப்பூர்:
மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-
மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.
திருப்பூர்:
தமிழக துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி ஜவுளி தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. ஜவுளி தொழில் அமைப்பு பிரதிநிதிகள் 16 பேர் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் என, பின்னலாடை நகரான திருப்பூரை சேர்ந்த நான்கு பேர் ஆலோசனைக்குழுவில் இடம்பெறுகின்றனர். விரைவில் இந்த குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்க உள்ளது.
இது சென்னையை தலைமையிடமாக கொண்டு அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர குழுவாக இயங்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப குழு கூடும். நூற்பாலை, ஆயத்த ஆடை, பின்னலாடை, தொழில்நுட்ப ஜவுளி என ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, பிரச்னைக்குரிய தீர்வுகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை அரசுக்கு பரிந்துரைக்கும்.
இது குறித்து பியோ தலைவர் சக்திவேல் கூறுகையில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானதாக உள்ளது. தற்போது கூட, சுத்திகரிப்பு மைய கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை குழு மூலம் ஜவுளித்துறையின் தொழில்நுட்ப தேவைகளை, விரைவாகவும், நேரடியாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். குழுவின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அரசு செயல் வடிவம் கொடுக்கும். இதன்மூலம் நூற்பாலை முதல் ஆயத்த ஆடை தயாரிப்பு வரையிலான தமிழக ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும்.
சைமா தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், அமைச்சர் அறிவித்தபடி, துரிதமாக, ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது. ஜவுளி தொழிலின் கஷ்ட, நஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டிருக்கும், ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றி வைப்பதிலேயே, குழுவின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றார்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், தமிழக அரசு முதல் முறையாக, தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவை அமைப்பது பாராட்டத்தக்கது. இந்த குழு மூலம், திருப்பூர் மீதான அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும். தொழில்நுட்பம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிலாளர் குடியிருப்பு, ஆய்வுக்கூடம் என எல்லா தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்ற முடியும்.
துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மத்தியில், ஜவுளித்துறை குறித்த புரிதல் மேலோங்கும். பட்ஜெட்டில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இது முதல் படி. இதே போல் மத்திய அரசும், ஜவுளித்துறைக்கான குழுவை அமைக்க வேண்டும்.






