உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கொங்கு மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணியால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-04-15 08:15 GMT   |   Update On 2022-04-15 08:15 GMT
ரோட்டின் மையப்பகுதியில் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி துவங்கியுள்ளது. இதனால் இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மாநகராட்சியாக தரம் உயர்த்திய பின் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் முந்தைய திட்டத்தில் இணைக்கப்படாமல் விடுபட்ட பகுதிகள் இத்திட்டத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வகையில் கொங்கு மெயின் ரோட்டில் இத்திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக கொங்கு மெயின் ரோட்டில் இ.எஸ்.ஐ., முதல் எம்.ஜி.ஆர்., நகர் வரையிலான பகுதியில் முதல் கட்டமாக இப்பணி துவங்கியுள்ளது.

இதற்காக ரோட்டின் மையப்பகுதியில் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி துவங்கியுள்ளது. இதனால் இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கொங்கு மெயின் ரோடு நகரின் முக்கியமான அதிகப் போக்குவரத்து நிறைந்த, பெரும்பான்மையான பகுதிகளை இணைக்கும் வகையிலான ரோடு. 

இதில் ஏராளமான குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் அமைந்துள்ளன. 

தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வரும் பரபரப்பான ரோடு. பாதாள சாக்கடை பணி காரணமாக வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே குழி தோண்டி, குழாய் பதித்து ரோடு செப்பனிடும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News