உள்ளூர் செய்திகள்
மதுரை பெரியார் பஸ் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-04-12 09:22 GMT
மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகலுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. இது நேரம் செல்ல, செல்ல பலத்த காற்றுடன் கூடிய கன மழையாக உருமாறியது.

மதுரையில் மதியம்  தொடங்கிய கனமழை, இரவு வரை நீடித்தது. இதனால் பெரியார் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மாட்டுத்தாவணி, கோரிப் பாளையம், தமுக்கம், நெல்பேட்டை, அண்ணாநகர், கே.புதூர், அய்யர்பங்களா, தெப்பக்குளம், சிம்மக்கல் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற வழியின்றி,  சாலைகளில் தேங்கியது. இதன் காரணமாக அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி, பெருங்குடி, சோழவந்தான், பரவை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சோழவந்தான் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அங்கு மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.  பேரையூரில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாலை நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான  காலநிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று 63 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரை வடக்கு பகுதியில் 22 மி.மீ. மழை பதிவானது. தல்லாகுளத்தில் 6 மி.மீட்ட ரும், மேட்டுப்பட்டி மற்றும் விமான நிலைய பகுதிகளில் 18 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
Tags:    

Similar News